Mukkiya Thirumana Porutham | முக்கிய திருமண பொருத்தம்

திருமணம்

ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமது முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். மேலும், திருமண பந்தத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்களாக இருந்தால் மட்டுமே, அவர்களால் அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கையை நடத்த முடியும் என்பதையும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். எனவே, அனைத்து வகையிலும் ஏற்றவாறு அமைந்த ஒரு ஆண், பெண்ணையே திருமண உறவில் இணைக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறிப்பாக இருந்தனர். இந்த உயரிய நோக்கத்தை அடைய, அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் துணை கொண்டனர். இதற்காக அந்த ஆண், பெண் இருவரது ஜாதகத்தையும் ஒத்திட்டுப் பார்த்து, அவர்களுக்கிடையே திருமணத்திற்கான பொருத்தம் உள்ளதா என ஆராய்ந்து அறிந்தனர். இவ்வாறான பொருத்தம் அமைந்திருந்தால் மட்டுமே, அவர்கள் அந்த ஜோடிக்குத் திருமணம் செய்தனர்.

இவ்வாறு, மண வயதில் உள்ள ஆண், பெண் இருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்து, அவர்களுக்கிடையே நிலவும் திருமணப் பொருத்தத்தைக் கண்டறிவதையே திருமணப் பொருத்தம் எங்கிறோம். இது ஜாதகப் பொருத்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

திருமணப் பொருத்தம்

இவ்வாறு பார்க்கப்படும் திருமண பொருத்தம், மண வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் 10 அம்சங்களில், அந்த ஆண், பெண் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமையையும், பொருத்தத்தையும் ஆராய்ந்து அறிகிறது.

இந்த 10 முக்கியத் திருமணப் பொருத்தங்கள் குறித்து, இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.

முதலாவது திருமணப் பொருத்தம், தினப் பொருத்தம் ஆகும். இங்கு, தினம் என்பது, அந்த ஆண், பெண் இருவரது ஜன்ம நட்சத்திரத்தைக் குறிக்கிறது. அவர்களுக்கிடையே தினப் பொருத்தம் இருந்தால், அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் மண வாழ்க்கை வாழும் வாய்ப்புள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.  

இரண்டாவது, கணப் பொருத்தம் ஆகும். திருமணத்திற்குக் காத்திருக்கும் ஜோடியின் குண நலன்களைக் கண்டறியும் இது, கணவன் மனைவியாக அவர்கள், ஒருவருக்கொருவர் ஒத்த குணத்தைக் கொண்டிருப்பார்களா என்று ஆராய்கிறது. இதன் மூலம், அவர்கள் மண வாழ்க்கையின் ஒற்றுமை, இல்லற சுகம் ஆகியவற்றைக் கண்டறியலாம்.

தம்பதிகளுக்கு இடையே, அடுத்த பொருத்தமான மகேந்திரப் பொருத்தம் இருப்பது, அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்கும், அந்தக் குழந்தைகள் செல்வச் சிறப்புடன் வாழ்வதற்கும் அவசியமாகிறது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தப் பொருத்தம், மண வாழ்க்கையில் பெண்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், செல்வாக்கு போன்றவற்றை அளிக்க வல்லது.            

ஐந்தாவதாகப் பார்க்கப்படும் திருமணப் பொருத்தம், யோனிப் பொருத்தம் எனப்படும். அவர்களது தாம்பத்திய உறவில் ஏற்படும் திருப்தி, அவர்களுக்கு இடையே உள்ள நெருக்கம் ஆகியவற்றை, இது குறிக்கிறது.

ராசிப் பொருத்தம் என்பது, அந்த ஆண், பெண் இருவரும் பிறந்த ஜன்ம ராசிகளுக்கு இடையே உள்ள பொருத்தத்தை ஆராய்கிறது. இந்தப் பொருத்தம் இருப்பது, அவர்கள் நல் வாழ்க்கைக்கும், ஆண் சந்ததி உருவாவதற்கும் வழி வகுக்கும் என்பது நம்பிக்கை.

ஏழாவது திருமணப் பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம் ஆகும். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் அதிபதியாக விளங்குகிறார். இந்த கிரகங்களுக்கு இடையே நிலவும் உறவு, நட்பு, பகை, சமம் என பல வகைப்படும். குறிப்பிட்ட ஆணின் ராசி அதிபதிக்கும், பெண்ணின் ராசி அதிபதிக்கும் நட்பு நிலவினாலோ, அவர்கள் உறவு சமமாக இருந்தாலோ, அந்த ஆண், பெண்ணிற்கிடையே ராசி அதிபதிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளலாம். பகையாக இருந்தால், பொருத்தம் இல்லை எனலாம். இந்தப் பொருத்தம் இருப்பது என்பது, அவர்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதற்கு அவசியமாகும்.

வசிய பொருத்தம் என்பது, ஒரு கணவன், மனைவிக்கு இடையே நிலவக் கூடிய வசீகரத் தன்மை அல்லது ஈர்ப்பைக் குறிக்கிறது. அவர்கள் இருவரும் அன்னியோன்யமான தம்பதிகளாக இருப்பார்களா என்பதை, இந்தப் பொருத்தம் காட்டக் கூடியது ஆகும்.

ரஜ்ஜு பொருத்தம் என்பது, 10 திருமணப் பொருத்தங்களில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஒரு பொருத்தம் இல்லாவிட்டால், மற்ற எல்லாப் பொருத்தங்கள் இருந்தாலும், அந்தத் திருமணத்தைப் பெரியவர்கள் நடத்தி வைக்க மாட்டார்கள். கணவரது ஆயுள் பலத்தை இது குறிப்பதால், மண வாழ்க்கையில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் மனைவியின் மாங்கல்ய பாக்கியத்தை இது நிர்ணயிக்கிறது எனலாம்.

10 திருமணப் பொருத்தங்களில் இறுதியானது வேதைப் பொருத்தம் ஆகும். மண வாழ்க்கையில், கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கிடையே இந்தப் பொருத்தம் இருப்பது அவசியமாகும். மண வாழ்க்கையில், அவர்கள் அனுபவிக்கக் கூடிய இன்ப, துன்பங்கள், புரிந்துணர்வு போன்றவற்றையும், அவற்றின் தீவிரத்தையும் இந்தப் பொருத்தம் காட்ட வல்லது.   

அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களை அணுகி, இவ்வாறு திருமணப் பொருத்தம் பார்த்து, ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் மணமுடிப்பது, அவர்களது நல்வாழ்விற்கும், நீண்ட, மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

Comments

  1. Interesting post. Thanks to share with us. Also Get in touch with Astrologer Rishi Ji, who offered effective solutions to many customers all over Canada. Indian Astrologer in Toronto | Astrologer Near Me in Toronto | Love Spells in Toronto | How To Get Love Back in Toronto | Spiritual Healer in Toronto

    ReplyDelete

Post a Comment